
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நர்மதாபுரம் மாவட்டத்தில் பிபாரியா பகுதியில் ஷாஹித் பகத்சிங் அரசு முதுகலை பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியருக்கு பதிலாக பியூனை நியமித்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேர்வு தாள்களை சரி பார்க்க முடியாத சூழ்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த முக்கியமான பணியை செய்ய பியூன் ஒருவரை நியமித்தது. இந்த விடைத்தாள்களை சரி பார்ப்பதற்கு பியூனுக்கு வெறும் ₹ 100 ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் தேர்வு தாள்களை பியூன் மட்டுமே சரி பார்க்கிறார். அருகில் எந்த ஒரு பேராசிரியரும் இல்லாதது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்த வீடியோவை தொடர்ந்து உயர்கல்வித்துறை உடனடியாக பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.
प्रोफेसर की गैरहाजिरी में चपरासी ने जांच दी कॉपी, 5000 रुपये भी कमाए. pic.twitter.com/sP2m5fvVtz
— GARIMA SINGH (@azad_garima) April 8, 2025
அதன்படி இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற செயல் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நடைபெறுகிறது. மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் செயல்களை இதுபோன்ற தகுதியற்றவர்கள் மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை குறித்த கேள்விகளையும் சமூக வலைதளங்களில் பலரும் எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.