
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி வேல்முருகன் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் கிருபாகரன்(19) தனியார் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜான் தனது நண்பரான முத்தமிழ் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜானின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.