உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் அனைத்திலும் இருந்து பல கோடி மக்கள் பங்கேற்கின்றனர். இதனை அடுத்து பிரயாக்ராஜ் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தினம் தோறும் புனித நீராடுவதற்கு பல பகுதிகளிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதால் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில், விமானம் மற்றும் பஸ்களில் வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்திற்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். சில பக்தர்கள் வெகு தூரம் நடந்து சென்று திரிவேணி சங்கமத்தை அடைய வேண்டியதாக உள்ளது. இந்த சூழ்நிலையை அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் திரிவேணி சங்கம பகுதிக்கு செல்ல வேண்டிய பக்தர்களை தங்களது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விடுகிறார்கள்.

மீண்டும் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து விடுகிறார்கள். இதற்காக ரூபாய் 100 முதல் 1000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இதனால் தங்களுக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 5000 வரை கிடைப்பதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்களும் இந்த சேவை தங்களுக்கு மிகவும் வசதியாகவும், எளிதாக இருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.