காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஓச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நிலத்திற்கு சிவகுமார் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்து சேவை கட்டணத்தையும் செலுத்தினார். பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சிவகுமார் நெமிலி தாசில்தாரிடம் கேட்டபோது அவரும் முறையான பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து சிவகுமார் வேலூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தனிப்பட்டா கேட்டு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம் சிவகுமாருக்கு சொந்தமான நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்க வேண்டும். சேவை குறைபாடு காரணமாக சிவகுமாருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக குற்றம் புரிந்த அலுவலரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவு தொகை 25 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.