
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ஒரு பூங்காவின் அருகே ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு ஒரு ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அந்த ஜோடியிடம் தகாத முறையில் மிரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில், ஆரஞ்சு நிற டி-ஷர்ட் அணிந்த ஆண் மற்றும் புர்கா அணிந்த ஒரு பெண் இருவரும் பைக்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை காணலாம். அப்போது அங்கு வந்த சிலர் அவர்களிடம் “உங்க குடும்பத்துக்கு நீங்க இங்க இருக்கிறது தெரியுமா? என கேள்வி எழுப்ப மற்றொருவர் அதனை வீடியோவாக பதிவு செய்கிறார்.
மேலும் புர்கா அணிந்து கொண்டு ஒரு ஆணுடன் இப்படியா உட்கார்ந்து இருப்ப? என தகாத முறையில் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் அந்த ஜோடியை தவறாக பேசியுள்ளனர். பின்னர் அவர்கள் 5 பேரும் அந்த ஆரஞ்சு நிற டி-ஷர்ட் அணிந்த ஆணை சுற்றி வட்டமிட்டு கட்டைகளால் தாக்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ அந்தப் பூங்காவின் பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து அந்த பெண் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதி பாதுகாப்பு கேமராவை ஆய்வு செய்த பின்னர் 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.