சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1997-ஆம் ஆண்டு அருணாச்சலம் தென்குமரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் புதிய மின் இணைப்புக்கு சான்றிதழ் பெறுவதற்காக விவசாயி விண்ணப்பித்திருந்தார்.

அப்போது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அருணாச்சலத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். கடந்த 2004-ஆம் ஆண்டு சேலம் நீதிமன்றம் உரிய ஆதாரங்கள் இல்லாததால் அருணாச்சலத்தை விடுவித்தது. இதனால் சென்னை ஹைகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அருணாச்சலத்திற்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றபோது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். உடனடியாக அவரை சிறை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அருணாச்சலம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.