
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பெரம்புதூர் அடுத்த கீவலூர் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த தொடர் குற்ற பின்னணி கொண்ட குற்றவாளியான சகா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாககூறப்படுகிறது. இதனால் குற்றவாளியான சகாவுக்கும், சிறுமியின் பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஆரம்பித்த தகராறு இறுதியில் கைக்கலப்பாக மாறியுள்ளது. இதனால் கோபமடைந்த சகா சிறுமியின் தந்தையை அறிவாளால் வெட்ட முயன்று உள்ளார். மேலும் சிறுமியின் தாயை காலால் எட்டி உதைத்து தகராறு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஸ்ரீ பெரம்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் படி காவல்துறையினர் குற்றவாளி சகாவை பிடித்து அவரிடம் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். பின்னர் சகாவை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் வேலூர் மத்திய சிறையில் சகா அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.