
ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் நியூஸ் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடைபெறுகிறது. இந்த சேனலின் நிருபர் ஹெய்டன் நெல்சன். இவர் வழக்கம் போல சூரிய உதயம் என்ற காலை நிகழ்ச்சிக்காக தயாராகி கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி ரன்டில் என்ற வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த வணிக வளாகம் பொதுமக்கள் அதிகமாக வரக்கூடிய வணிக வளாகம் ஆகும். எனவே இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நடைபெறும் குற்ற சம்பவங்களின் விகிதங்களை புள்ளி விவரங்களுடன் நெல்சன் வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் வந்த மர்ம நபர் ஒருவர் நெல்சனுக்கும், அவரை படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராமேனிற்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டு சென்றார். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து லைவ் ஆக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது யாரும் கவனிக்காத வகையில் லைவ் நிகழ்ச்சிக்காக ஸ்டாண்டின் மீது மாட்டப்பட்டிருந்த 3 விளக்குகளில் ஒரு விளக்கை அந்த மர்ம நபர் திருடிவிட்டு சென்றுவிட்டார்.
திருட்டு நடைபெறும் போது அதனை யாரும் கவனிக்கவில்லை. சற்று பின்னரே விளக்கு திருடு போனது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனே இதனையும் நிகழ்ச்சியின் போது நெல்சன் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது, இதிலிருந்து குற்ற நிகழ்ச்சிகள் எந்த அளவுக்கு தீவிரமாக நடக்கின்றன என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ள முடியும் என கூறினார். அந்த விளக்கு எதற்காக பயன்படும், அதன் மதிப்பு என்ன என்பது கூட திருடிச் சென்ற நபருக்கு தெரியாது என நெல்சன் நிகழ்ச்சியில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.