
பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கி கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்பிறகு விஜய் கட்சி தொடங்கி 6 மாதங்கள் கடந்து விட்டதால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
இதனையடுத்து செப்டம்பர் 23-ல் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு விழுப்புரம் எஸ்பி அனுமதி வழங்கிவிட்ட நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதால் முறையான அறிவிப்பு வரும் வரை தொண்டர்கள் அமைதியாக காத்திருக்க வேண்டும் என விஜய் கூறியிருந்தார்.
இந்நிலையில் குறிப்பிட்ட தேதியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெறுவதில் சிக்கல் என்றும் அதனால் தேதியை மாற்றுவதற்கு நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இன்று காலை 11 மணியளவில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்த முறையான அறிவிப்பை வெளியிட இருக்கிறார். அதாவது விஜய்க்கு சில நெருக்கடிகள் இருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் மாநாடு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பதற்றத்தில் இருக்கிறார்கள்.