
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரசிகர்கள் பலரும் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சி கொடி ஏந்தி, தாரை தப்பட்டை முழங்க மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கோவையில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் மாநாடு தொடர்பாக பரபரப்பு வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் மீண்டும் எம்.ஜி.ஆர் வருகிறார், மக்களாட்சி தருகிறார் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் படமும், விஜய் படமும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மாநாடு நடைபெறும் மைதானத்தில் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கட்டவுட்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கோவையில் எம்.ஜி.ஆர் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.