மதுரை மாவட்டத்திலுள்ள  ஒத்தக்கடை பகுதியில் வசிப்பவர் மணிமுத்து (50). இவர் ஒரு கட்டிட பொறியாளர். இவருக்கு திவாகர்(39) என்ற நண்பர் உள்ளார். திவாகர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து மணிமுத்துவிடம் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மணிமுத்து வாங்கி தருவதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இதைத்தொடர்ந்து மணிமுத்து, திவாகரிடம் கடன் செலவுக்காக ரூபாய் ஒன்றரை லட்சம் முன்பணமாக கேட்டுள்ளார்.

மணிமுத்து, திவாகருக்கு  கடனையும் பெற்றுத்தராமல், கடன் செலவுக்கு கொடுத்த முன் பணத்தையும் திருப்பித் தராமல் இருந்துள்ளார். அதனால் மணிமுத்துவிடம் அடிக்கடி கடன் வாங்கித் தருமாறு அல்லது செலவுக்கு கொடுத்த ஒன்றரை லட்சம் பணத்தை திருப்பி தருமாறும் கேட்டு உள்ளார். இதற்கு மணிமுத்து கடன் வாங்கித் தருவதாக சமாளித்துள்ளார். மணிமுத்து தன்னை ஏமாற்றுவதாக நினைத்து திவாகர் தனது  சகோதரர் தாமரை (34), நண்பர்கள் ஆரப்பாளையம் விக்னேஷ் (32), எல்லீஸ்நகர் ராஜா (39) ஆகியோருடன் இணைந்து மணிமுத்துவை கடத்தி அவரது மனைவியிடம் 3 லட்சம் வரை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

இதுகுறித்து மணிமுத்துவின் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். விரைந்து  செயல்பட்ட மாட்டுத்தாவணி இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்.ஐ., தியாகப்ரியன் தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கிய சில மணி நேரத்திலேயே கடத்தல் கும்பலை கண்டறிந்தனர். படுகாயமடைந்த மணிமுத்துவை இந்த கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கமிஷனர் லோகநாதன் மாட்டுத்தாவணி காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.