காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பியாக ராகுல் காந்தி இருந்த நிலையில் அவரை தகுதி நீக்கம் செய்ததால் வயநாட்டில் இன்றைய தினம் கருப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த தகவலை வயநாடு மாவட்ட குழு தலைவர் என்.டி. அப்பச்சன் தெரிவித்துள்ளார். மேலும் இவர் சூரத் நீதிமன்றத்தின் முடிவு இறுதியானது கிடையாது எனவும் நாங்கள் சட்டப்படியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று கூறியுள்ளார்.