தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் இது குறித்து  தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திராவிட சாாயலில் பயணிக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. திராவிட சாயலில் வேறொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் விஜய் தன் கட்சியை வளர்க்க வேண்டும்.

இந்த திராவிட வழியை விட்டுவிட்டு வேறு வழியில் விஜய் மாற்றி பயணிப்பார் என்று நம்புகிறேன். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டுக்கு முன்பாக தன்னுடைய கொள்கைகள் குறித்து விஜய் ட்ரெய்லர் காட்டுகிறார். திமுகவின் கிளை கழகம் போல் தமிழக வெற்றிக்கழகம் மாறிவிடுமோ என்று தோன்றுகிறது என்று கூறினார். மேலும் பெரியார் மற்றும் அண்ணா பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்கள் பாதையில் பயணிப்போம் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் மூலம் நடிகர் விஜயின் அரசியல் கட்சி கொள்கை இதுதான் என்று பேசப்படும் நிலையில் தற்போது திராவிட மாடலில் தான் விஜய் பயணிக்கிறார் என்ற தமிழிசை சௌந்தரராஜன் கூறியது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.