
இன்றைய காலகட்டங்களில் பொதுமக்கள் பலர் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இன்னும் பலர் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் வைத்துள்ளார்கள். இந்தியாவில் ரிசர்வ் வங்கி, வங்கி கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும், வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கையில் வரம்புகள் தீர்மானிக்கவில்லை என்பதும் தான் இதற்கு காரணம்.
இன்றைய நடைமுறையில் வங்கி கணக்கு என்பது டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. அதோடு அரசினால் வழங்கப்படும் சலுகைகளை பெறுவதற்கும், பணத்தை சேமிப்பதற்கும் வங்கி கணக்கு கட்டாயம் தேவை. இதை தொடர்ந்து தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் சம்பள வங்கி கணக்கு என்ற வகையில் கணக்கு வைத்திருக்கின்றனர்.
தற்போது ஒருவர் எத்தனை வங்கி கணக்கு வைத்திருக்கலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் அதற்கான விதிமுறைகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலில் நீங்கள் வைத்துள்ள கணக்குகளில் சரியான பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் வங்கி கணக்கு உபயோகிக்கப்படாமல் இருந்தால் உங்கள் கணக்கை வங்கி முடக்கிவிடும்.
எனவே வங்கிக் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கிக்கணக்கில் எப்போதும் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறினால் வங்கி கணக்கு எதிர்மறை ஆகிவிடும். எனவே குறைந்தபட்ச தொகையை வைத்திருப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் ஒன்றுக்கும் அதிகமான வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது அதற்கான குறைந்தபட்ச பணம், வங்கியில் இருந்து பெறப்படும் மெசேஜ் சேவைக்கான கட்டணம், டெபிட் கார்டு கட்டணம் போன்றவற்றை நீங்கள் கட்ட வேண்டி இருக்கும். எனவே தேவையான கணக்குகளை மட்டும் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.