
உலகத்தின் தெற்கே ஆப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள வடக்குப் பகுதிகளில் குடியேறி உள்ள ஹிம்பா பழங்குடி மக்கள், தங்கள் இயற்கையான அழகு மற்றும் சுத்தம் பற்றிய பாரம்பரிய முறைகளால் உலகளவில் புகழ் பெற்றுள்ளனர்.
நவீன உலகம் சுத்தம் எனக் கூறும் போது தினசரி குளிப்பதை முக்கியமாகக் கருதும் நிலையில், ஹிம்பா பெண்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே, தங்கள் திருமண நாளில் நீரில் குளிப்பதோடு, அதற்குப் பிறகு குளிக்கும் பழக்கம் இல்லாமல் வாழ்கிறார்கள்.
நீர் பயன்படுத்தாமல் சுத்தத்தை பராமரிக்க ஹிம்பா மக்கள் பண்டைய முறைகளை பின்பற்றுகின்றனர். ஹிம்பா பெண்கள், புகை குளியல் முறையில், சிறப்பு மூலிகைகளை வேக வைக்கும் போது வரும் புகையால் உடலை சுத்தம் செய்கிறார்கள்.
மேலும் வேகவைத்த மூலிகைகளால் எழும் நீராவியை உடலை சுற்றி விட்டுக்கொண்டு, உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுகிறார்கள். இது அவர்களின் மரபில் தலைமுறையாண்டு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை.
நவீன அழகு வகைகளுக்கே சவால் விடும் வகையில், ஹிம்பா பெண்களின் இந்த பாரம்பரிய அழகு நடைமுறைகள், உலக அளவில் கலாச்சார ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இயற்கைக்கு ஏற்ப வாழும் இந்த பழங்குடியினர், சூரிய வெப்பத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க விலங்கு கொழுப்பு மற்றும் காடுகளில் கிடைக்கும் ஹெமடைட் சுழல்கல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சிவப்புத் தூளை உடலில் பூசி கொள்வார்கள்.
சாதாரணமாக 50,000 பேர் கொண்ட இந்த சமூகத்தில் பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் வேட்டையாடுதலில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறை, அழகு குறித்த பாரம்பரியங்கள் மற்றும் சுத்தம் பற்றிய எண்ணங்கள், நவீன உலகத்திற்கு புதுப்பாய்ச்சலாக அமைந்துள்ளன.
“அழகு என்றால் நாள்தோறும் குளிக்கவேண்டும்” என்ற நம்பிக்கையை முற்றிலும் மாற்றும் ஹிம்பா பெண்கள், உலகிற்கு மரபு பாதுகாப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்கள்.