இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), ஆதார் கார்டு அங்கீகாரம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் கார்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன் குறிப்பிட்ட குடியிருப்பாளரின் தகவலறிந்த ஒப்புதல் அவசியம் என தெரிவித்துள்ளது. ஆதார் அங்கீகாரத்தை நடத்துவதற்கு முன்பு நிறுவனங்கள் குடியிருப்பாளர்களின் ஒப்புதலை காகிதத்தில் (அ) மின்னணு முறையில் பெறவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

UIDAI ஆனது நிறுவனங்களுக்கு இது தொடர்பாக வெளியிட்டுள்ள புது வழிகாட்டுதல்களின் படி, சேகரிக்கப்படும் தரவுவகை மற்றும் ஆதார் அங்கீகாரத்தின் பின்னணியிலுள்ள காரணத்தை குடியிருப்பாளர்கள் புரிந்துகொள்வதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்த குறிப்பிட்ட அங்கீகாரங்களின் பதிவுகள் ஆதார் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்கு மட்டுமே சேமித்து வைக்கப்படும்.

அத்துடன் ஆதார் சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளின் படி, காலாவதி தேதி முடிந்ததும் இத்தகவல்கள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆர்இ-க்கள் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை மறைக்காமல் (அ) அதில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளாமல் ஆதாரை உடல் (அ) மின்னணு வடிவில் சேமிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இருந்தால் மட்டும்தான் ஆர்இ-க்கள் ஆதார்எண்ணை சேமித்து வைக்கவேண்டும் என UIDAI கூறியுள்ளது. ஆர்இ நிறுவனங்கள் குடியிருப்பாளர்களுக்கு ஆதார் அங்கீகார சேவைகளை அளிக்கிறது. அந்நிறுவனங்கள் ஆதார் எண் மற்றும் மக்கள் தொகை, பயோமெட்ரிக் ஓடிபி தகவலை அங்கீகாரத்திற்காக சமர்பிக்கின்றனர்.

இது தவிர்த்து ஆர்இ நிறுவனங்கள் மக்களை மரியாதை உடன் நடத்த வேண்டும் என ஆதார் எண்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை பற்றி அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதோடு இந்த செயல்முறையில் ஏதேனும் ஆள்மாறாட்டம் (அ) மோசடி உள்ளிட்ட ஏதேனும் விஷயங்கள் நடந்தால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் ஆர்இகள் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.