
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை தடுக்கும் விதமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும் வருமானத்திற்கு, அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2021-ம் ஆண்டு மற்றும் கடந்த 2022-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்குகளின் மொத்த விபரங்கள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த விவரங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் போன்ற புகாரின் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு 371 வழக்குகளும், கடந்த 2022-ம் ஆண்டு 250 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த வருடம் தென் மண்டலத்தில் அதிகபட்சமாக 71, கோவையில் 17, திருச்சியில் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு வேலூரில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த வருடம் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர், மின்வாரிய ஊழியர்கள், காவலர்கள் என மொத்தம் 47 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களுக்கு அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முன்னாள் அமைச்சர்கள் 3 பேருக்கு சொந்தமான 161 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் 4 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 650 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 18 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 90 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1.16 கோடி ரூபாயும், முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு சொந்தமான 58 இடங்களில் நடைபெற்ற ரெய்டில் 2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாய், 6.637 கிலோ கிராம் தங்கம் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடம் முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான 30 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 14 லட்சத்து 94 ஆயிரத்து 900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.