
சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிக்கோல் ஆண்டனி என்ற 19 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் அவருடைய பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர். அவர்கள் ஆண்டனியிடம் மறு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் ஆண்டனி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை மறுதேர்வு நடைபெற இருந்ததால் அதிகாலை 3 மணி அளவில் பெற்றோர் ஆண்டனியை எழுப்பி படிக்குமாறு கூறியுள்ளனர். இந்நிலையில்தேர்வை நினைத்து ஆண்டனிக்கு மிகவும் பயம் ஏற்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பினார்.
அவர் நொளம்பூர் சர்வீஸ் சாலை அருகே வந்தார். அப்போது ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பை அவர் பார்த்தார். பின்னர் பைக்கை நிறுத்திவிட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடிக்கு ஆன்டனி சென்றார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த குடியிருப்பின் காவலாளிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.