பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச் செய்து தற்கொலை தாக்குதல் நடத்தினர். அதில் அந்த பகுதியில் இருந்த 8 வீடுகள் சேதமான நிலையில் 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

அதன் பிறகு 20 பேர் பலத்த காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ராணுவ வளாகத்திற்குள் தீவிரவாதிகள் நுழைந்ததால் உடனடியாக அங்கிருந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் 6 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது ஹபீஸ் குல் பகதூர் ஆயுதகுழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இந்த குழுவானது ஆப்கானிஸ்தான் தாலீபானுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தாக்குதல் நடந்த இப்பகுதிக்கு அருகில் இஸ்லாமிய மத பள்ளி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அங்கு நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில்  6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.