சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற நகரில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் யாராவது மருந்தை ஆன்லைனில் ஆர்டர் செய்திருப்பார்கள் என்று நினைத்த பெண் டாக்டர் அந்த நபரிடமிருந்து மருந்தை வாங்கியுள்ளார்.

அப்போது அந்த நபர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் டாக்டரை குத்திவிட்டு, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். இதனால் பயத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் காயமடைந்த பெண் டாக்டரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ராமபுரம் பகுதியில் வசிக்கும் நாகமுத்து(41) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.