சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஜோதி நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலி விரைவு சாலையில் வாகன மேல் பாகங்களை பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை ஒரு லாரியில் கடை ஊழியரான மகேஷ் என்பவர் வெல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பறந்து டீசல் டேங்கில் பட்டதால் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் மகேஷ் கையில் தீக்காயம் ஏற்பட்டது. இதற்கிடையே வேலை பார்த்துக் கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் வெளியே ஓடிவந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மற்றொரு லாரியும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரிகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் இரண்டு லாரிகளும் எரிந்து நாசமானது. மேலும் காயமடைந்த மகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.