சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டையில் வசிக்கும் அக்சய் என்பவர் பேப்பர் மேல் சாலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போட்ட போது எதிர்பாராதவிதமாக வெடித்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஷோரூமில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இதனையடுத்து 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.