
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து அரசு டவுன் பேருந்து ஆயக்குடி வழியாக வேப்பன்வலசு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பழனி- திண்டுக்கல் ரோட்டில் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே சென்ற போது என்ஜின் பகுதியில் இருந்து தீப்பொறி பறந்தது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் பெருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.
உடனே பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதுகுறித்து அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகளும், தொழில்நுட்ப பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தில் சோதனை செய்தனர். அப்போது பேட்டரி பகுதியில் இருக்கும் வயர்கள் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டது தெரியவந்தது. அந்த பேருந்தை பணிமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.