டெல்லி பகுதியில் மீன் கடைகளை மூட வேண்டும் என்று இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டியதால் அப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது டெல்லியில் சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலின் அருகில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் சட்டபூர்வமாக  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கடைகளை மூடுமாறு சில இளைஞர்கள் வியாபாரிகளை மிரட்டி உள்ளனர்.

இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் அதில் பாஜக ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாக திருநாணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொயித்ரா குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “இந்த மீன் வியாபாரிகள் தாங்கள் கட்டிய கோவிலுக்கு அருகில் சட்டப்பூர்வ கடைகளை அமைத்துள்ளனர். அந்த கடைகளை மூடுமாறு பாஜகவின் ஆதரவாளர்கள் வியாபாரிகளை மிரட்டி உள்ளார்கள். அவர்கள் மீது காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் , இந்த மிரட்டல் பெங்காலி சமூகத்தின் மீது கொண்ட தாக்குதல் ஆகும் என்றும் குற்றம் சாட்டினார்.

இதைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்சதேவா இது குறித்து பேசி உள்ளார். அதில் “கோயில்களின் புனிதத்தை எல்லாரும் மதிக்க வேண்டும். ஆனால் சி ஆர் பார்க் மீன் கடைகள் சட்டபூர்வமாக அமைக்கப்பட்டவை ,அந்த பகுதி மக்களுக்கு அவை அவசியமானது என்றும், வியாபாரிகள் கோவில்களுக்கு மரியாதை செலுத்துவதோடு சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பின்பற்றுகிறார்கள் என்றும் கூறினார்.

பின்னர் இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது தொடர்பாக போலீசார் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து எந்தவொரு புகாரும் அளிக்கப்படாத நிலையிலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.