
மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆகவே செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளித்து மனித உயிர்களை காப்பாற்றும் முறையில் மருத்துவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை இதற்கு பயன்படுத்தி பரிசோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த லூனி என்ற பெண்ணிற்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு பன்றியின் சிறுநீரகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அலபாமா பல்கலைக்கழக மருத்துவர்கள் கடந்த மாத இறுதியில் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
மேலும் ஆபரேஷனுக்கு பிறகு லூனியின் உடல்நிலை தேறிய நிலையில் 11 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லூனி அருகிலுள்ள குடியிருப்பில் தங்கி இருந்து மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு ஓய்வு எடுத்து வருகின்றார். இருப்பினும் சில பரிசோதனைகளுக்காக இந்த வாரம் தற்காலிகமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து தனது சொந்த ஊருக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதே சமயம் அவருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் செயலிழந்தால் அவர் மீண்டும் டயாலிசிஸ் செய்ய ஆரம்பிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதில் சிறுநீரகம் செயலிழந்ததால் 8 வருடங்களாக டயாலிசிஸ் செய்து அவஸ்தைப்பட்டு வந்த லூனி தற்போது தனது வாழ்வு புதிதாக ஆரம்பம் பெற்றது போன்று உள்ளது என மகிழ்ச்சி அடைந்துள்ளதாக மருத்துவர் தரப்பில் கூறியுள்ளனர். செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி சிகிச்சை அளிக்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு லூனியின் அறுவை சிகிச்சை முக்கியப்படியாக அமைந்துள்ளதாகவும் நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.