
தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுவாக காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு புது துணி அணிந்துவிட்டு பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு பின்னர் பட்டாசுகள் வெடிப்பது தான் வழக்கம். ஆனால் பட்டாசுகள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்தாலும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. ஏற்கனவே தலைநகர் டெல்லி காற்று மாசுபாடால் மிக மோசமான அளவுக்கு பாதிப்படைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பட்டாசுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பட்டாசுகள் வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரக்கட்டுப்பாடு விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசுகள் வெடிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும் மருத்துவமனைகள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.