சமீப காலமாக அடிக்கடி நடைபெறும் ரயில் விபத்துக்கள் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் அகர்தலா லோகமான்ய திலக் விரைவு ரயில் இன்று மதியம் தடம் புரண்டது. இது குறித்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா விஷ்வா சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ரயில் 12520 அகர்தலா எல்டிடி எக்ஸ்பிரசின் 8 பெட்டிகள் மதியம் 3.55 மணிக்கு விபத்துக்குள்ளானது.

இந்த ரயில் லும்டிங்கிற்கு அருகே உள்ள டிபலாங் நிலையம் அருகே தடம் புரண்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதமும் காயமும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். ரயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். விரைவில் மீட்பு ரயில் சம்பந்தப்பட்ட இடத்தை சென்றடையும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.