அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும், அமலாக்கத்துறையால் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவருமான கரூர் அசோக் குமார், இன்று (ஏப்ரல் 9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். பண பரிமாற்றம் மற்றும் வேலை வாய்ப்பு மோசடி தொடர்பான வழக்கில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து 2024 செப்டம்பரில் ஜாமீனில் வெளியே வந்த பின்னும், அசோக் குமார் தொடர்பான எந்தத் தகவலும் இல்லை. இதனை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி, அவரை தேடி வருவதாகவும் தெரிவித்திருந்தது. ஜனவரி மாதம், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்தநிலையில், பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக் குமார் இன்று நேரில் ஆஜராகியுள்ளதும், இது வழக்கின் பின்னணியில் ஒரு முக்கிய திருப்பமாக காணப்படுகிறது. தற்போது இந்த வழக்கின் விசாரணை புதிய கட்டத்துக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே எதற்காக இவ்வளவு விரைவாக அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டு வரும் நிலையில் அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது அவருடைய தம்பி தானாக முன்வந்து சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.