உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காபூர் மாவட்டத்தில் பில்குவா பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் அஜய் நிமேஷ் மற்றும் டிங்கூ. இருவருமே அப்பகுதியில் ஈரிக்ஷா ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ நாளன்று அஜய் தனது நண்பர் டிங்கூ உடன் ஈரிக்ஷாவில் மது அருந்த சென்றுள்ளார்.

இருவரும் அதிகமாக மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே ரூபாய் 1000 பணத்துக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் டிங்கூ ஐஸ் கட்டி உடைக்கும் உளியால் தனது நண்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அஜயின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அஜய் தனது குடும்பத்தாரிடம் தனது நண்பர் டிங்கூ தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக கூறிவிட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அஜயின் குடும்பத்தினர் வீடியோவாக பதிவு செய்து காவல்துறையினரிடம் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் டிங்கூ மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வெறும் ரூபாய் 1000க்கு தனது நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.