
அதிக சம்பளம் என ஆசை வார்த்தைகளை கூறி போலி முகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் பலர் சைபர் கிரைம் கும்பலால் ஏமாற்றப்பட்டு அடிமைகளாக தவிக்கின்றனர். குறிப்பாக கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் இந்தியர்களை டார்கெட் செய்து, சுற்றுலா விசாவில் வேலைக்கு அழைத்து சென்று, அங்கு அவர்களை சிறைபிடித்து கொடுமைப்படுத்துகின்றனர். வேலை செய்ய மறுப்பவர்களுக்கு மின்சார அதிர்ச்சி உள்ளிட்ட கொடுமைகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து 9 வழக்குகளை பதிவு செய்து 10 முகவர்களை கைது செய்துள்ளது. மேலும், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் சிக்கியிருந்த 186 தமிழர்களை மீட்டுள்ளது.
எனவே, வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் என்று ஆசை வார்த்தைகள் கூறி வரும் போலி முகவர்களை நம்பி செல்லாமல், காவல்துறையின் எச்சரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லும் முன், அந்த நாட்டின் விசா விதிமுறைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்டு செல்வது அவசியம்.