
அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தனது பதவி காலத்தின் போது ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவீந்திரன் சார்பில் ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான தாமதம் ஏற்படுகிறது என மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி அறிக்கையை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு கடந்த ஜனவரி 6ஆம் தேதி நீதிபதி பி . வேல்முருகன் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார். அதன்படி சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவின் சார்பில் கடந்த 14ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனக்கு எதிரான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ். என்.வி. என் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் ஆஜராகிய ராஜேந்திர பாலாஜி மூத்த வக்கீல் வி. கிரி, தங்களது மனுதாரருக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணை நிறைவு பெற்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள போது வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளதாக வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை தமிழ்நாடு அரசுக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற பிப்ரவரி 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்து தீர்ப்பளித்தனர்.