தெற்காசியாவில் முதல் முறையாக இன்று சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸ் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இன்று தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ளார். இந்த போட்டியை முன்னிட்டு இன்று 500 பேருக்கு இலவசமாக போட்டியை பார்வையிட டிக்கெட் வழங்கப்படுகிறது.

அதாவது விளையாட்டுத்துறை சார்பில் free ticket code அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயத்தை 8000 பேர் வரை அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை பார்க்க வருபவர்களுக்கு பார்க்கிங் செய்யும் விதத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் கடற்கரை ஆகிய இடங்களில் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் இந்த பொருள்கள் சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்டு விடும் எனவும் அந்த பொருள்கள் மீண்டும் திரும்ப தரப்படாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இன்று தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஈவிஆர் சாலை, ஆர்ஏ மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10:00 மணி வரை கனரகம் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.