
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அவர் ஒரு தனியார் விடுதியில் தங்கி, அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று பெண் சுற்றுலா பயணி மற்றும் டேனியல், பங்கஜ், பிபாஷ் ஆகிய 4 சுற்றுலாப் பயணிகளும், தங்கும் விடுதி நடத்தும் 29 வயதான பெண் ஆகிய 5 பேரும் துங்கபத்ரா எரிகரையில் இசையை கேட்டுக்கொண்டு, நட்சத்திரங்களை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் பெட்ரோல் எங்கே கிடைக்கும் என்று கேட்டனர். அதோடு அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து பெண்கள் இருவரையும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதை தடுக்க வந்த ஆண் சுற்றுலாப் பயணிகள் 3 பேரையும் அந்த கும்பல் துங்கபத்ரா நதியில் தள்ளிவிட்டு சென்றனர். இதில் டானியல் மற்றும் பங்கஜ் ஆகிய இருவரும் உயிர் தப்பினர். ஆனால் பிபாஷை காணவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் 2 பெண்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பிபாஷை தீயணைப்பு துறையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் இன்று கங்காவதி தாலுகாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.