
மாநில சைபர் கிரைம் போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் கூறியதாவது, ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு தற்போது அதிகரித்து வந்துள்ளது. ஆனால் இதில் இருக்கும் ஆபத்து பெரும்பாலானவருக்கு தெரியவில்லை. ஜிப்லி வரைகலை புகைப்படங்களை வழங்குவதற்கு தற்போது பல்வேறு செயலிகள் உள்ளன.
இவற்றில் அங்கீகாரம் இல்லாத செயலிகளும் உள்ளது. ஆனால் பொதுமக்கள் அறியாமையால் அங்கீகாரம் இல்லாத செயல்களில் ஜிப்லி அனிமேஷன் புகைப்படங்களை பெறுவதற்காக, தங்களது பயோமெட்ரிக் மற்றும் புகைப்படங்களை பகிர்கின்றனர்.
இதன் மூலம் அந்த செயலிகள் ஒருவரது பயோமெட்ரிக் மற்றும் புகைப்படங்களையும் 3-வது நபரிடம் வழங்கும் ஆபத்து உள்ளது. அங்கீகாரம் இல்லாத செயல்களில் ஒருவர் பயோமெட்ரிக் புகைப்படங்களை விளம்பர நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் விற்கும்போது அவை டீப் பேக்குகளில் பயன்படுத்தும் அபாயமும் உள்ளது.
அங்கீகாரம் இல்லாத செயலிகளை ஒருவர் பயன்படுத்தும் போது அவரது செல்போனில் மற்றும் கணினியில் வைரஸ் ஏற்படவும் அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடும் வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற செயலிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க அங்கீகாரம் இல்லாத செயலிகள், இணையதளங்களில் இருந்து வால்பேப்பர்கள், ஆர்ட் பேக்குகள் உள்ளிட்ட எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
பரிவர்த்தனை, சுயவிபரங்களை பதிவிடும் முன் சம்பந்தப்பட்ட இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற மோசடியில் பாதிக்கப்பட்டால் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.