
இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதோடு அவர்களின் இடுபொருள்களுக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக விவசாய கடனுக்கான உச்ச வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதாவது 1.60 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தியுள்ளது. இதனை வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ல் அமல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வங்கிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் கூறியிருந்ததாவது, புதிய உச்சவரம்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும், இது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பயனடைவார்கள் என்று வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 3 லட்சம் வரை கடன் வழங்கும் ‘கிசான் கிரெடிட் கார்டு’ கடன்கள் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் எளிதாக விண்ணப்பிக்க முடியும். வேளாண் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முயற்சி நல்ல பயனை தரும் என்று வேளாண் துறையின் வல்லுநர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.