
தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்தது.
பின்னர் அந்த பத்து மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியதோடு மசோதாக்கள் மீது இன்னும் 90 நாட்களுக்குள் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியது.
இந்நிலையில் நீலகிரி ஆளுநர் மாளிகையில் வரும் 25, 26, 27 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் அறிவித்திருந்தார். இதற்கு பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து பெ.சண்முகம் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டுவது சட்டவிரோதம் என்று தெரிவித்தார். ஆளுநரின் செயல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல் எனவும், அவரது அழைப்பை துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.