
தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்தது.
பின்னர் அந்த பத்து மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியதோடு மசோதாக்கள் மீது இன்னும் 90 நாட்களுக்குள் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியது.
இந்நிலையில் தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வந்த நிலையில் அவர் தற்போது டெல்லி பயணம் சென்றுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு உட்பட பல்வேறு அம்சங்களை குறித்து ஆலோசிக்க ஆளுநர் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் வெளியாகியது.
அதன்படி மூன்று நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர் என் ரவி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளார். மறு சீராய்வு மனு தொடர்பாக அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோரையும் சந்தித்த ஆலோசனை நடத்தது உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.