ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது. பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை விற்பனை செய்து வரும் ஆவின், தமிழகம் முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலம் 225 வகையான பால் பொருள்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதனைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், ஆவின் இனிப்பு மற்றும் கார வகைகள் குறித்த சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும், தீபாவளியை முன்னிட்டு ஆவின் பல்வேறு இனிப்பு, கார வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், காம்போ ஆபர்களையும் அறிவித்துள்ளது. மைசூர்பாகு, மிக்சர், குக்கீஸ், சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய 300 ரூபாய்க்கான காம்போவுடன், நெய் பாதுஷா, பாதாம் மிக்ஸ், குலாப் ஜாமூன் போன்றவற்றை உள்ளடக்கிய 500 ரூபாய் காம்போவும் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும், காஜு பிஸ்தா ரோல், காஜூ கட்லி, முந்திரி அல்வா போன்ற சிறப்பு இனிப்பு வகைகள் அடங்கிய 900 ரூபாய் காம்போவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பொதுமக்களுக்கு மலிவான விலையில் தீபாவளி இனிப்புகளை அணுக முடியுமென்ற சாதகத்தை ஆவின் வழங்குகிறது.

ஆவின் நிறுவனம் குறிப்பிட்ட சதவீத தள்ளுபடிகளுடன், பல்க் புக்கிங் செய்தவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இதன் மூலம், பெரிய அளவிலான ஆர்டர்கள் மேற்கொள்ளும் வணிகர்கள் மற்றும் குடும்பங்கள் சிறப்பு விலைகுறைப்புகளை பெறலாம்.