தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கும், பிஎஃப் திட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கும் புதிய விதிமுறையை வகுத்த நிலையில் அதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி வெளியானது. இதன்மூலம் இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக பென்சன் தொகை பெற முடியும். இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் அதிக பென்ஷன் தொகையை வாங்குவதற்கு தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுடன் சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஓய்வூதிய நிதி அமைப்பின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்டலில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கால அவகாசம் மார்ச் 3-ம் தேதி வரை இருந்த நிலையில் மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. இதனால் தற்போது மே 3-ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. மேற்குறிப்பிட்ட தேதிக்குள் ஊழியர்கள் அதிக பென்சன் தொகை வாங்க விரும்பினால் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இபிஎஃப்ஓ திட்டத்தில் ஊழியர்கள் அதிக பென்சன் பெற வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டதோடு, இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 4 மாதங்கள் கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.