மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி  வெஸ்ட் பகுதியில் டி மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்று உள்ளது. இந்தக் கடையில் ஊழியருக்கும் நவநிர்மாண சேனா உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மொழி தொடர்பான தகராறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த மார்ச் 25ஆம் தேதி அன்று டி மார்ட் கடையில் பணிபுரியும் பணியாளர் ஒருவர் “நான் மராத்தியில் பேசமாட்டேன். இந்தியில் மட்டுமே பேசுவேன். உன்னால் முடிந்ததை செய்”என வாடிக்கையாளர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையானதை ஒட்டி எம்.என்.எஸ் குழு சிறிது நேரத்திலேயே அந்த கடைக்கு சென்று ஊழியரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மராட்டி பேச தயங்கிய ஊழியரை அறைந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் எம்.என்.எஸ் குழுவினர் அவர் இந்த பணியில் தொடர வேண்டுமானால் மராட்டி கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று முலுண்டு பகுதியில் ஒரு பாஸ்ட் புட் கடையில் மராட்டி பேசும் பெண்ணை தவறாக நடத்தியதாக அந்த ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. முலுண்டு பகுதியில் மான்சிமேகா என்ற பெண்ணும் அவரது தாயரும் ஒரு உணவகத்துக்கு சாப்பிட சென்றபோது அங்குள்ள ஊழியர் ஒருவர் அவர்களை “உங்களுக்கு வசதி இல்லை எனில் ஏன் இங்கு வந்து சாப்பிடுகிறீர்கள்?” என கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த எம்.என்.எஸ்  உறுப்பினர்கள் அந்த உணவகத்திற்கு வந்து ஊழியரை அடித்ததுடன் அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். இது போன்ற தொடர் சம்பவங்களால் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் மொழி அடிப்படையிலான அரசியல் விவாதங்கள் மீண்டும் தூண்டப்படுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.