
வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் இந்து மத தலைவரான சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். ஏனென்றால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கிருஷ்ண தாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இது இந்துக்களின் போராட்டங்களை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் கிருஷ்ண தாசை விடுவிக்க வேண்டும் என்று இந்துக்கள் டாக்கா, சிட்டகாங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தினர்.
இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, இந்து துறவியின் கைது மற்றும் ஜாமின் மறுப்பு ஆழ்ந்த கவலை அளிக்கிறது. வங்கதேசத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தீ வைத்தல், சூறையாடுதல், திருட்டு மற்றும் நாசப்படுத்துதல் போன்ற பல ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த சம்பவங்களை செய்தவர்கள் தலைமறைவான நிலையில், நியமான கோரிக்கைகளை முன் வைக்கும் மத தலைவர் மீது குற்றச்சாட்டுகள் வைப்பது துரதிஷ்டமானது என்று தெரிவித்துள்ளது.