கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்புவிளை பகுதியில் மலைகுன்று அமைந்துள்ளது. அதன் அடிவாரத்தில் இன்ஜினியரான ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார்.

நேற்று முன்தினம் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை உருண்டு ஆனந்தராஜின் வீடு மீது விழுந்தது. இதனால் வீட்டின் ஒரு அறை கட்டிட சுவர் இடிந்து சேதமானது. இதனை பார்த்ததும் ஆனந்தராஜும் அவரது மனைவியும் பதற்றத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து ஆனந்தராஜ் கூறும்போது, அந்த பாறை உருண்டு விழுந்த அறையில் தான் எனது தாய் அம்பிகா தூங்குவது வழக்கம்.

அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இதனால் அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம் என கூறினார். இதுகுறித்து அறிந்த பஞ்சாயத்து தலைவி லைலா ரவிசங்கர், கிராம நிர்வாக அலுவலர் சுமித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பாறையை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.