கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் கிருஷ்ணகுமார் கேரளாவில் உள்ள தனது தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். சங்கீதா தனது மகள்களுடன் பட்டணம் புதூரில் வசித்து வருகிறார். தற்போது கேரளாவில் இருந்து பட்டணம் புதூர் வந்த கிருஷ்ணகுமார் தனது மனைவி சங்கீதாவை சந்தித்து பேசி உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் துப்பாக்கியை எடுத்து தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டார். அதன் பின் அங்கிருந்து கேரளாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது பட்டணம் புதூர் குடியிருப்போர் சங்கத்தின் வாட்ஸ்அப் குழுவில் தனது மனைவி குறித்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு வெளிப்புறமாக பூட்டியிருந்தால் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்களுக்கு சங்கீதா கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. உடனே இந்த தகவலை காவல்துறையினருக்கு தெரியப்படுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து  கேரளா சென்ற கிருஷ்ணகுமார் தனது வீட்டின் முன் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக் கொண்ட செய்தி தெரிய வந்தது. தற்போது அவரது உடலையும் மீட்டு  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது.