
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ராம், சிவகாசி, சண்டைக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவர் கடந்த 2014ம் ஆண்டு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்தார். ஆனால் இந்த படம் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு தனது கலைமாமணி விருதை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.
ஆரம்பத்தில் எனக்கும் என்னுடைய ஹவுஸ் ஓனருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. அவர் கேட்பதற்கு முன்பாகவே நான் என்னுடைய வாடகை பணத்தை கொடுத்து விடுவேன். இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பு திடீரென வந்து வீட்டை காலி செய்ய வேண்டும், எனக்கு வீடு வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். அவரும் சரி என்று கூறினார். ஆனால் நான் சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்தேன். அப்போது பூட்டிய வீட்டை உடைத்து வெள்ளை அடிச்சிருக்காங்க. அந்த சமயத்தில் என் வீட்டுக்குள் இருந்த கலைமாமணி விருது மற்றும் டாலரையும் காணவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அதன்படி புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரு தரப்பு விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.