
திமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின், நான் தொடர்ந்து ஒவ்வொரு திருமண விழாக்களிலும் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு செய்தி…. அதுவும் சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணம் என்றால், அந்த திருமணத்தில் நிச்சயமாக நான் எடுத்துச் சொல்வது உண்டு. இது போன்ற சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறுகின்ற திருமணங்கள் 1967 க்கு முன்பு நடைபெறுகிறது என்று சொன்னால், அந்த திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடி ஆகும் என்ற அங்கீகாரத்தோடு நடைபெற முடியாத ஒரு சூழ்நிலை.
ஆனால் 1967-ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு கழகம் முதலில் அரசு பொறுப்பு ஏற்ற பிறகு…. முதல் முதலில் சட்டமன்றத்தில் முதலமைச்சராக நுழைந்த அண்ணா அவர்கள் சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடி ஆகும் என்ற அங்கீகாரத்தை நமக்கு எல்லாம் பெற்று தந்தார்கள். ஆகவே இன்றைக்கு நடைபெற்றிருக்கின்ற இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி, முறைப்படி, செல்லுபடி ஆகும் என்று அங்கீகாரத்தோடு நடந்தேறி இருக்கிறது.
இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல, இது ஒரு கலப்பு திருமணம். அதுமட்டுமில்லை இது காதல் திருமணம் ஆகத்தான் இருக்கும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த வகையில் நடைபெற்றிருக்கின்ற இந்த மணவிழா நிகழ்ச்சியிலே நானும், நம்முடைய கழகத்தினுடைய பொதுச் செயலாளர் துரைமுருகன் அவரும், பொருளாளர் டி.ஆர் பாலு அவர்களும்…. அதேபோல மற்ற கழக முன்னோடிகள் எல்லாம் பங்கெடுத்து வாழ்த்துவதிலே மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் என தெரிவித்தார்.