நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தட்டாங்கொட்டை அருந்ததியர் நகரில் கௌதம்ராஜ்(21) வசித்து வந்துள்ளார். இவர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கு முடிவெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா(19) என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் கௌதம் ராஜிக்கு போதைப்பழக்கம் இருந்துள்ளது. இவர் அடிக்கடி கஞ்சா பிடிப்பது, போதை மருந்து செலுத்தி ஊசி போடுவது போன்றவை செய்துள்ளார்.

இதை அறிந்த அனுசுயா அவரை கண்டித்துள்ளார் இருந்தும் இந்த பழக்கத்திலிருந்து மாற முடியாமல் கௌதம்ராஜ் தவித்துள்ளார். சம்பவ நாளன்று கௌதம்ராஜ் வீட்டிற்கு அவரது நண்பர்கள் சரவணன்,ஸ்ரீதர் வந்திருந்தனர். வீட்டிற்கு வெளியே மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். இந்த மூவரும் பேசிக்கொண்டே மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். சில மணி நேரத்திலேயே நண்பர்கள் அலறிக்கொண்டு கீழே ஓடி வந்தனர். இதைப் பார்த்த அனுசுயா பதறி அடித்து மாடிக்கு ஓடினார். அனுசுயாவின் தாயாரும் அவருடன் ஓடியுள்ளார். அங்கு கௌதம் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

கௌதமின் நண்பர்கள் அருகே இருந்த கதிர்வேலு என்பவரை அழைத்து வந்தனர். உடனே கௌதமை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து கௌதமின் நண்பர்களிடம் விசாரித்தபோது கௌதம் கையில் போதை ஊசி போட்டுக்கொண்டு மயங்கி கீழே விழுந்தார் என கூறியுள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கௌதமின் வீட்டில் அவர் பயன்படுத்திய ஊசி, மருந்து ஆகியவற்றை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அவர் போதை ஊசி போட்டுக் கொண்டுதான் இறந்துள்ளாரா? இல்லை வேறு ஏதேனும் நடந்து உள்ளதா? அவருக்கு போதைப் பொருள் எங்கிருந்து கிடைத்தது? யாரிடம் வாங்கியுள்ளார்?என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். போதைப் பழக்கத்தால் இளைஞர் இறந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.