அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில்  இருந்து பேசுவதாகவும், உங்கள் மகளுக்கு கல்வி கடனாக 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறி மகளின் விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து கல்வி கடன் பெறுவதற்கு வருமான வரி ஆவணம் அல்லது கடன் தொகை முன் பணம் கட்ட வேண்டும் என்று கூறி பல்வேறு தவணையாக 2,66,040 பெற்று ஏமாற்றியுள்ளனர்.

தான் ஏமாந்தது அறிந்த பஞ்சநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சென்னையைச் சேர்ந்த வினோத்குமார், சிவரஞ்சனி, சுரேகா, கிரிஜா, விஷால் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அதன் பின் அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் 5 வயர்லெஸ் ஃபோன்கள் ஆகியவைற்றை கைப்பற்றினர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்பவரை கைது செய்ய தேடி வருகின்றனர். இவர்கள் மீது திண்டுக்கல், சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.