தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் மேகலா தாண்டா கிராமத்தைச் சேர்ந்த பூக்கியா கணேஷ் என்ற இளம் காங்கிரஸ் தொண்டர், தனது திருமண தேதி குறித்து எடுத்துள்ள முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. காரேப்பல்லி மண்டல யூத் பிரதான் பதவியில் உள்ள கணேஷ், காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராகவும், முதல்வர் ரெவந்த் ரெட்டியின் பரம பக்தராகவும் இருக்கிறார்.

இதன் காரணமாக, “ரெவந்த் ரெட்டிக்கு நேரமிருக்கும்போதுதான் என் திருமண நாள் நிர்ணயம் செய்யப்படும்” என அவர் உறுதியாக கூறியுள்ளார். 2024 மார்ச் 6ஆம் தேதி, மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கணேஷின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதனையடுத்து நடைபெறும் திருமணத்திற்கான முஹூர்த்தம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. காரணம், முதல்வர் ரெவந்த் ரெட்டி திருமணத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டுமென்ற கணேஷின் வலியுறுத்தல்.

“முதல்வர் வராவிட்டால், கல்யாணமே செய்யமாட்டேன்,” என அவர் உறுதியாக கூறியுள்ளார். இது அவருடைய பெற்றோர்களையும், உறவினர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தன்னம்பிக்கையுடன் கூடிய முடிவை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, கணேஷ் வைரா MLA ரம்தாஸ் நாயக்கிடம் மனுவும் கொடுத்துள்ளார். அந்த மனுவில், முதல்வர் ரெவந்த் ரெட்டியுடன், மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களும் திருமணத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது கிராம மக்கள் கூட, முதல்வரும் அமைச்சர்களும் வரவேண்டும் என கோரிக்கையை எடுத்து வருகின்றனர். இப்போது, இந்த பொது மக்களின் பாசத்திற்கும், ஒருவரின் அரசியல் நேசத்திற்கும் நடுவே இருக்கும் திருமணம், முதல்வரின் நேரம்தான் தீர்ப்பு சொல்லும் என்கிற நிலையை உருவாக்கியுள்ளது.