பெங்களூருவில் ஒரு வடஇந்தியர் மற்றும் ஆட்டோ டிரைவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மொழி விவாதத்தை தூண்டியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரமடைந்த வடஇந்தியர் ஒருவர் ஆட்டோ டிரைவரிடம், “நீ பெங்களூருவில் இருக்கணும்னா இந்தி பேசணும்” என கூற, அதற்கு ஆட்டோ டிரைவர் “நீங்க தான் இங்கே வந்திருக்கீங்க… நீங்க தான் கன்னட பேசணும்… நானும் இந்தி பேசமாட்டேன்” எனக் கடும் பதிலடி கொடுத்தார்.

 

இந்த சம்பவத்தின் முழு பின்னணி தெளிவாக தெரியாத நிலையில், அந்த வடஇந்தியரின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தை சந்தித்துள்ளது. இது தொடர்பாக X தளத்தில் பலர் தங்களுடைய கோபத்தை பதிவு செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம், பெரும்பாலான வடஇந்தியர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள விரும்பாத ஒரு பழக்கத்தை மீண்டும் பிரதிபலிக்கிறது. “மராட்டி, தமிழ், கன்னட… எது இருந்தாலும், உங்க வாழ்க்கைக்காக அந்த மாநிலத்துல இருக்கீங்கனா, அந்த மொழியை கற்றுக்கொள்வதுதான் மரியாதை” என பலர் வலியுறுத்தினர்.

இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை என்பதையும், “இது பள்ளியில் நாங்கள் கற்றது… கல்வி இல்லாதவர்கள்தான் இந்தியை தேசிய மொழி என நினைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர். மொழி என்பது வலுக்கட்டாயம் அல்ல, தனிப்பட்ட மரியாதையாக இருக்கவேண்டும் என்ற வாதம் மீண்டும் மையமாகியுள்ளது.