கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அனேகல் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் கவுடா பௌலூர்(35).இவர் ஒரு பா.ஜ.க தொண்டர். இவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் கடந்த இரண்டு மாதங்களாக தான் மிக அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் கிரண்கவுடா, ஹரிஷ், பாஸ்கர், நாராயணப்பா, தொட்டஹகடேமதுகவுடா, சரவணா ஆகியோர் என குறிப்பிட்டு இருந்தார்.

இதில் குறிப்பாக கிரண் கவுடா தான் தனது மன உளைச்சலுக்கு நேரடி காரணம் என்றும் அவரை காவல்துறையினர் விடக்கூடாது தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பாஜக மண்டல தலைவர் முனிராஜு கவுடா, உள்ளாட்சி குழு உறுப்பினர் பாக்கியம்மா மற்றும் அவரது கணவர் சீனிவாஸ் ஆகியோர் தன்னை அவர்களது வீட்டிற்கு அழைத்து பண விவகாரம் குறித்து பேசுவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றனர்.

அங்கு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும் அதில் மிக முக்கியமாக பாக்கியமா மற்றும் சீனிவாஸ் தன்னை இரண்டு மணி நேரம் அடித்து துன்புறுத்தியதாகவும், அதன் பின் தனது கைபேசியை பறித்ததாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டு அனேகல் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூட மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து  அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரவீன் கவுடாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடியோ வெளியிட்டு பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.